சென்னை, பிப்.28: எதிரிகளிடம் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன், எதற்கும் கலங்காத நெஞ்சுறுதியுடன் பதில் அளித்திருப்பது இந்தியர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் எப்16 ரக விமானங்களை விரட்டிச் சென்றபோது எதிர்பாராதவிதமாக விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எந்தவித கலக்கமுமின்றி துணிச்சலுடன் அபிநந்தன் பதில் அளித்தார்.

அதே சமயம் அவர் ஓட்டிச்சென்ற விமானம் எந்த ரகத்தை சேர்ந்தது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். அத்துடன் உங்களுடன் நோக்கம் என்னவென்ற கேள்விக்கு அந்த ரகசியத்தை வெளியிட முடியாது என்றும் எந்தவித அச்சமுமின்றி பதில் அளித்தார். அவரது தீரத்தை கண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் சற்று மிரண்டுதான் போனார்கள்.

எதற்கும் கலங்காத அபிநந்தனின் வீரத்தை கண்ட இந்தியர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். தாய் நாட்டிற்காக தீரத்துடன் போராடிய அபிநந்தனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை அடுத்துள்ள திருப்பனமூர் கிராமமாகும். அபிநந்தனின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக விமானப்படையில் சேவை புரிந்தவர்கள்.

அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். அவரது தந்தை வர்தமான் பிரான்ஸ் நாட்டில் விமானியாக வேலைப் பார்த்துவிட்டு இந்திய ராணுவத்தின் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வு பெற்றார். மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார்.

அபிநந்தனின் தாயார் மல்லிகாவும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர். அபிநந்தனின் தாய், தந்தையினர் சென்னையை அடுத்த மாடம்பாக்கம் திருமலை நகரில் வசித்து வருகின்றனர்.
அபிநந்தன் அமராவதி சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்துவிட்டு, தாம்பரம் விமானப்படையில் பயிற்சி பெற்று 2004-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
அபிநந்தனின் மனைவி டெல்லி விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். அபிநந்தனின் தந்தை வர்தமான் வீர மகனைப் பெற்ற பெருமையோடு எதற்கும் கலங்காமல் இருந்து வருகிறோம் என்று
கூறினார்.