சென்னை, பிப்.28: பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தனின் மாடம்பாக்கம் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்றும் இந்த இல்லத்திற்கு சென்று பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். கூட்டம் அதிகமாக கூடியதை தொடர்ந்து அபிநந்தனின் பெற்றோர் டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ் தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தன. இதன் பின்னர் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய போர் விமானம் மாயமானது.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானியான விங்கமாண்டர் அபிநந்தனை பிடித்து வைத்து இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்த்தமா கிழக்கு விமானப்படை கமாண்டிங் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்றவர். மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றி உள்ளார்.
அபிநந்தன் குறித்து அவரது தந்தை கூறுகையில், வீரமகனை பெற்றதற் காக பெருமைப்படுகிறோம். எதற்கும் நாங்கள் கலங்கவில்லை என்றார். அபிநந்தனின் தாயார் மல்லிகா மற்றும் குடும்பத்தினரை நேற்று பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன், கே.என்.ராமச்
சந்திரன் எம்.பி., எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து அபிநந்தனை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விளக்கி அவரை இந்திய ராணுவம் எப்படியாவது மீட்டுவிடும் என்று உறுதியளித்தனர்.
இவர்களது வீடு தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் திருமலைநகர் ஜல்வாயு விகார் விமானப்படை குடியிருப்பில் உள்ளது. சொந்த ஊர் திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனூர். அபிநந்தனின் சகோதரி தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி முடித்து தற்போது இந்திய விமானப்படை யின் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார்.
அபிநந்தனின் மனைவி டெல்லி விமானப்படை குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பாகிஸ்தானிடம் அபினந்தன் பிடிபட்ட செய்தி அறிந்ததும் அவரது இல்லத்திற்கு ஏராளமானோர் விரைந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. கூட்டத்தை சமாளிப்பதற்காக வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே அபிநந்தனின் பெற்றோரை விமானப் படை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை திமுக முதன் செயலாளர் டி.ஆர்.பாலு, பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, ஆகியோரும் மாடம்பாக்கம் இல்லத்திற்கு சென்றனர்.