சென்னை, பிப்.28: அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இந்திய விமானப்படை குறித்து படக்குழுவுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

அந்த படத்தில் நாயகன் கார்த்தி இந்திய விமானப்படையில் பணிபுரிவதாக நடித்திருந்தார்.
விமானப் படை குறித்த தகவல்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ள மணிரத்னம், மாடம்பாக்கத்தில் வசித்து வரும் சிம்மக்குட்டி வர்த்தமானை நாடினார்.

காற்று வெளியிடை படத்தில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் சிம்மக்குட்டி கலந்து கொண்டார். இந்திய விமானப்படை வீரரின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு உருவான காற்று வெளியிடை போன்ற வித்யாசமான படங்கள் தொடர்ந்து வர வேண்டும். வீரர்களின் கடினமான வாழ்க்கை உலகுக்கு இதன்மூலம் தெரிய வரும் என்று பேசி-னார்.
நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி:
காற்று வெளியிடை படத்திற்காக எனக்கு பயிற்சியளித்தது, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தை தான் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். அவருடனும் இன்னும் சில வீரர்களுடனும் பழக வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.

மேலும், அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன். அவர்கள் வீரத்துடன் தொடர்ந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதால் தான் நாம் அனைவரும் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.