மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க உலக நாடுகள் வலியுறுத்தல்

உலகம் முக்கிய செய்தி

நியூயார்க், பிப்.28: புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகளுக்கான கருப்பு பட்டியலில் வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன.

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுறுத்-தி உள்ள-ன. மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.-வுக்கான இந்-திய தூதர் சையது அக்பருதீன், இதுகுறித்து உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று அந்த நாடுகளின் ஆதரவை கோரியிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதற்கிடையே மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென்று ஏற்கனவே ஐ.நா.-பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து வந்தது. ஆனால் இந்த முறை இதுவரை தனது கருத்தை சீனா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.