சென்னை, மார்ச் 2: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதனிடையே தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை அமைக்க அக்கட்சித் தலைமை முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பாமக, பிஜேபி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி அதிருப்தியில் சென்ற புதிய தமிழகம் மீண்டும் இன்று பேச்சுவார்த்தைக்கு திரும்பி வந்தது. மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி வழங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது அதிமுகவின் தொகுதி பங்கீடு குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பா.பெஞ்சமின், செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அதிமுக மெகா கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோன்று காலியாக உள்ள 21 இடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-வெற்றிக் கூட்டணியில் புதிய தமிழகம் தன் னை இணைத்துக்கொண்டுள்ளது. காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.

அதிமுக, பாமக, பிஜேபி ஆகிய கட்சிகள் உள்ள இந்த கூட்டணியில் புதிய தமிழகம் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இம்முறையும் தனிச் சின்னம் பெற்று போட்டியிடுவோம். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.
தேமுதிக உடன்பாடு தேமுதிகவுடன் அதிமுக நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று மாலைக்குள் உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
இன்னும் ஓரிரு நாளில் முடிவு ஏற்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
தேமுதிகவுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், ராஜ்யசபை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் பார்த்தசாரதி, மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
தமாகவுக்கு மயிலாடுதுறை அதிமுகவின் மெகா கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவும் இடம் பெறும் என தெரிகிறது. அக்கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.