சென்னை, மார்ச் 5: ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:-
மீன் வளத்தில் முழுமையான வளர்ச்சியை அடைந்திடும் வகையில் மூக்கையூர் கிராமத்தில் ரூ.113 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கிராமத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும், பொன்னாகரம் கிராமத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை கிராமத்தில் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மீன் இறங்கு தளங்கள் உள்ளிட்ட ரூ.125 கோடியே 70 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் செயல் பாடுகளை கணினி மயமாக்கும் வகையில் ரூ.15 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டி லான இம்போடெக்ஸ் திட்டம், புதுக் கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.10 கோடியே 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடங்கள், பல்வேறு அரசு மருத்துவமனையில் ரூ.47 கோடியே 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.