சென்னை, மார்ச் 5: சென்னையில் குடிநீர் தேவை மற்றும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய செயலியை அமைச்சர் வேலுமணி அறிமுகப்படுத்தினார். இது குறித்து குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:-
சென்னைக்குடிநீர் குறை தீர்க்கும் செயலியானது பொதுமக்கள்/நுகர்வோர் தங்களது குடிநீர்/கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் கைபேசி மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர்-கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள்- புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை கைபேசி மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த குறை தீர்க்கும் செயலியை கைபேசி மூலமாக பதிவு செய்து தங்களது புகார்களுக்கு உடனடி நிவாரணம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.