பொள்ளாச்சி, மார்ச் 5: பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அத்துமீறிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசின் கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை பொள்ளாச்சி அருகே மகினாம்பட்டி பகுதியில் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 12ஆம் தேதி கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக சபரி (எ) ரிஷ்வந்த் உள்பட மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மாணவியின் சகோதரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சபரி (எ) ரிஷ்வந்த்தின் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட போது, இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.