சென்னை, மார்ச் 5: தற்போது வெளிவந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் 90எம்எல் திரைப்படம், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் வசூலை வாரிக்குவிக்க தவறவில்லை.
ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை இயக்கியவர் அனிதா உதிப் என்ற பெண்மணி ஆவார். இவர் திரைப்படத்துறைக்கு புதியவர் அல்ல. கடந்த 2002-ம் ஆண்டு இவர் பாடிய “அழகிய அசுரா’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லராக வெளிவந்த போதே  சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்தை தாறுமாறாக விமர்சிப்பவர்கள் மீது அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கேள்வி: 90 எம்எல் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, விமர்சனத்தால் உங்களுக்கு பதற்றம் ஏற்பட்டதா?
பதில்: எனக்கு எந்த பதற்றமும் இல்லை. உண்மையில் ஒருவிதமான ஆர்வம் மட்டும் இருந்தது. இது ஒரு புதுவிதமான வகையைச் சேர்ந்தது. இந்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த போது இதை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியப்பட வைக்கிறது.  நான் பெண்ணியத்தை உயர்த்திக் காட்ட விரும்பவில்லை, அதே சமயத்தில் ஆண்களை இழிவுபடுத்தவும் இல்லை.

ஒரு வணிக ரீதியிலான படத்தை உருவாக்கவே விரும்பினேன். ஆண்கள் இத்தகைய படத்தை எடுக்கும் போது ஒரு பெண் இதை செயல்படுத்தக்கூடாதா என்ற எண்ணம் என்னிடம் இருந்தது.
தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் ஆண்கள் அதை பின்பற்றுகிறார்களா? பெண்கள் மீது மட்டும் அதை திணிப்பது ஏன்? பெண்கள் மட்டும் உணர்வற்ற மரக்கட்டைகளா என்பதையே கேட்க விரும்புகிறேன். பெண்களும் ஆண்களைப் போல எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று காட்டவே விரும்பினேன்.

கேள்வி: ஒரு “ஏ’ படத்தை இயக்கியதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு, புனைப் பெயரை பயன்படுத்தியதாக சிலர் கூறுகிறார்களே?
பதில்: நான் பல திறமைகள் கொண்ட பெண். அழகிய அசுரா பாடலை பாடியிருகிறேன். சில பாப் இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறேன். கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருக்கிறேன். எனவே நான் புனைப் பெயரை பயன்படுத்தினேன்.

கேள்வி: 90 எம்எல் படத்தை எடுப்பதற்கு எப்படி முடிவு செய்தீர்கள்?
பதில்: பெண்களை முன்னிலைப்படுத்தி படம் எடுப்பவர்கள் அவர்கள் நீதிக்காக போராடுபவர்களாக சித்தரிப்பார்கள்.
குடும்பப் பெண் எப்படி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது போன்ற படங்களை எடுப்பார்கள். இவ்வாறு வெற்றி பெற்ற பெண்கள் வாழ்க்கையில் வெகு சிலரே. ஆனால் சாதாரண பெண்களின் நிலை என்ன. இதை யாரும் தமிழ் படங்களில் காட்டவில்லை. சில பெண் நண்பர்களிடம் நான் பேசியபோது அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை வைத்து இதை எடுத்தேன்.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை எது வேண்டுமானாலும் செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து பேசினால் அவர் கெட்டவள் என்று முத்திரை குத்தப்படுகிறாள்.
அனைத்து விதமான ஆண்களையும் கொண்ட இந்த சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? குடும்ப குத்துவிளக்கு என்று கூறியே ஒரு கூட்டுக்குள் அடக்கிவிடுகிறார்கள். என் சினேகிதிகள் பலர் கஷ்டங்களை அனுபவித்து வந்த போதிலும் அவற்றை வெளியே சொல்லவே அஞ்சுகிறார்கள். இதைத்தான் நான் இந்த படத்தில் காட்டியிருக்கிறேன். எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளன. அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. நானும் பெற்றோருடனும், மாமனார் மாமியாருடனும் வசித்திருக்கிறேன். பெண்கள் சுய அதிகாரம் பெற்றால் மட்டுமே அவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும். பெண்கள் ஜாலியாக இருக்கக்கூடாதா என நான் கேட்கிறேன்.

பெண்கள் குடிப்பதையும், புகைப்பதையும், கஞ்சா அடிப்பதையும் மட்டும் நான் இந்த படத்தில் காட்டவில்லை. வேறு சில விஷயங்களையும் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
இளைஞர்கள் இன்று இணையதளம் மூலம் உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள். என்னுடைய படம் எதையும் மாற்றி விடாது. பல படங்கள் நேர்மறையான செய்திகளுடன் எடுக்கப்படுகின்றன. அவற்றால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதா?
முதிர்ச்சியுள்ள ரசிகர்களுக்காகவே நான் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படத்தை எடுத்துள்ளேன். அந்த வகை ரசிகர்கள் இதை புரிந்து கொள்வார்கள். நான் கூறினால் மட்டும் புகைப்பதையும், மது அருந்துவதையும் விட்டுவிடுவார்களா என்ன?

கேள்வி: இந்த படத்தின் மூலம் உங்களுக்கு தனிப்பட்ட முறையிலான விமர்சனங்கள் வந்துள்ளனவா?
பதில்: அனைவருக்கும் திரைப்படம் என்றால் என்ன என்ற பொது அறிவு இருக்க வேண்டும்.
எனது படத்தை பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கதை, திரைக்கதை, வசனம் என்று எதை வேண்டுமானாலும் குறை கூறலாம். அதை வெறுக்கலாம். குப்பை கூடையில் போடலாம். ஆனால் படத்தை இயக்கியவரைப் பற்றி குறை கூற முடியாது.
நான் இந்த படத்தை இயக்கும் போது அரை போதையில் இருந்ததாக கூறுகிறார்கள். இதுதான் தனிப்பட்ட முறையிலான தாக்குதல் ஆகும்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பார்த்து ரசித்தவர்கள் 90 எம்எல் படத்தை குப்பைத் தொட்டி என்று சொல்வதை ஏற்க முடியாது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இதில் நான் விளக்கியிருக்கிறேன். சமுதாயத்தில் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் உணர்வு வேண்டும்.
இங்கு யாரும் 100 சதவீதம் சரியானவர்களாக இல்லாத போது மற்றவர்களைப்பற்றி மட்டும் ஏன் விமர்சிக்க வேண்டும்?.

கேள்வி: இப்போது படம் வந்துவிட்டது. இதில் நடித்த நடிகர், நடிகைகள் பற்றிய மதிப்பீடுகள் எப்படி உள்ளன?
பதில்: எல்லோரும் இந்த படத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இதை பலரும் வரவேற்கிறார்கள். இதை ஒரு கேளிக்கை ரீதியில் தான் நான் இதை பயன்படுத்தி இருக்கிறேன்.
சேரனின் திருமணம் படமும் இந்த படத்துடன் வெளியானது. ஆனால் எத்தனை பேர் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள்?.
இதில் நடித்துள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது நடிப்பு திறமை பாராட்டுக்குரியது. நான் பல தியேட்டர்களில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் ஒரே விதமான வரவேற்பு காணப்படுகிறது.
எனது படத்தில் நவரசமும் உள்ளது. இதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதைப்பார்த்து நான் பரவசம் அடைகிறேன்.