சென்னை, மார்ச் 5: சென்னை, விழுப்புரம், சேலம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கோட்டங்களுக்கான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோட்டையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை – மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 160 பேருந்துகளும், என மொத்தம் 132 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர்ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட மாநில அமைச்சர்கள். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலுடர் மாவட்டம், ஆதனுடர் கிராமம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 74/3-வது மைலில் தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டினை திறந்து வைத்து, 22 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறுதுறைமுகங்கள் துறை  சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், பாலமலை சாலையில்  1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1558 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள 42 சாலைப் பணிகள் மற்றும் 6 பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.