நாக்பூர், மார்ச் 5: நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 40-வது சதம் விளாசினார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் அவர் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் தொடர் நாக்பூரில் நடந்துவருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் களம்கண்டது. ஒருபுறம் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க, 3-வதாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, சதம் விளாசி எதிரணியை திக்குமுக்காட வைத்தார்.

இது அவரின் 40-வது சதமாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் கோலி 2-வது இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.  ஒருநாள் தொடர் வரலாற்றில் 40 சதங்களை அடித்து நொறுக்கிய விராட் கோலிக்கு, பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், 40-வது சதம் விளாசிய ரன் மெஷினுக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டலை அளிக்கவும் என்று ட்விட்டியுள்ளது.