சென்னை, மார்ச் 6:சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெற உள்ள அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

வரும் மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பிஜேபி, பாமக, என் ஆர் காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்த கூட்டணிக்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறுகிற கிளாம்பாக்கத்திற்கு செல்கிறார்.

முதலில் அங்கு அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார்.இதேபோல், தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.321.64 கோடி செலவில், ஈரோடு, கரூர், திருச்சி இடையே 142 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சேலம், கரூர், திண்டுக்கல் இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 2 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர, சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையையும் அவர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்

ஓ.பன்னீர்செல்வம், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்திற்காக, பிரமாண்டமான ஏற்பாடுகளை அதிமுக செய்துள்ளது.விமான நிலையத்திலிருந்து வண்டலூர், கிளாம்பாக்கம் வரை அதிமுக,பிஜேபி,பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தலைவர்களின் பிரமாண்டமான பேனர்கள் மற்றும் கட்டவுட்கள் வைக்கப்பட்டு அந்த இடமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.கூட்டணி அமைக்கப்பட்டவுடன் முதன் முறையாக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.பிரதமர் வருகையொட்டி 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகலில் தொடங்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
மேலும் பிஜேபி சார்பில், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், பொன் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், என். ஆர். காங்கிரஸ்த் தலைவர் ரங்கசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கே.கிருஷ்ணசாமி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான் பாண்டியன், தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தணியரசு எம்எல்ஏ, கொங்குநாடு முன்னேற்றக்கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுவார்கள்.
முன்னதாக பிரதமரின் வருகையை யொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.