புதுடெல்லி, மார்ச் 6:அயோத்தியில் ராம ஜென்ம பூமி நிலத்தை 3 பிரிவினர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மத்தியஸ்தம் செய்யலாம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 14 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூ‌ஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை ஏன் சுமுகமாக தீர்க்கக்கூடாது என்ற யோசனையை தெரிவித்தார்.

அந்த யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறி இந்த யோசனையை ஏற்கமறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது மத்தியஸ்தரை நியமிக்க இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, அயோத்தி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக தீர்த்துக் கொள்வது தொடர்பான விவகாரத்தில் உத்தரவை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.