சென்னை, மார்ச் 6:சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு பேசினார். அப்போது அவர், ‘போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது’ எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போயஸ் தோட்டம் விரைந்த போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அந்த தொலைப்பேசி மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து தொலைப்பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை, சென்னை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.