மணிலா, மார்ச் 6:பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின.

தவாவ் நகரில் இருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில், கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாகவும், ஐரோப்பிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்தது. பின்னர் அது 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின. அருகில் உள்ள பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.