சென்னை, மார்ச் 7:வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக, கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, பயனாளர்களை கண்டறிவதற்காக, 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் 9 பேர் கொண்ட குழுவென கூறப்பட்டுள்ளது.

அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஏழைகள் யாரென அடையாளம் காணும் வரை, நிதியுதவி வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்க வில்லை. இதற்காக அரசு மேற்கொள்ளும் நடை முறையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாக வாதிட்டார்.

முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது ஏழைகளாக கருதப்படுபவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் படிவங்களை விநியோகித்து வருகிறது.

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி. அதில், சில பகுதிகள் இல்லை. இந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவித்தொகை வழங்குவது என பின்னர் முடிவு செய்யப்படும். மேலும் பயனாளர்களை தேர்வு செய்யும் வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது மனுதரார் தரப்பில், ஏற்கனவே அரசு பிறப்பித்த அரசாணையில் 7 பேர் கொண்ட குழு மட்டுமே இருக்கிறது. இந்த அரசாணையில் திருத்தம் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். அந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினர். அதில், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்க பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்க தடை விதிக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே 7 பேர் கொண்ட குழு மட்டுமே இருப்பதாக அரசு பத்திரிக்கைக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதையே அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு தலைமை வக்கீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் 9 பேர் கொண்ட குழு என உள்ளது.

இதன் மூலம் பயனாளிகளின் வரம்புகள் அதிகரிக்கிறது. எனவே திருத்தப்பட்ட அரசாணையை அரசு தரப்பில் தாக்கல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து புதிய மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர்.