சென்னை, மார்ச் 7:அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவதற்கு நாங்கள் டிக்கெட் கொடுத்துவிட்டோம். இதை ஏற்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவது குறித்து இன்னும் முடிவு அறிவிக்கப்படாத நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்ப தற்கு நாங்கள் டிக்கெட் கொடுத்து விட்டோம். போயிங் விமானம் தயாராக உள்ளது. டிக்கெட்டை ஏற்றுக் கொண்டு பயணிக்க வேண்டியது அவர்களது கையில் தான் உள்ளது. எங்கள் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. ஏற்பதும், நிராகரிப்பதும் அவர்களை பொறுத்தது என்றார்.

திமுகவுடனும் பேச்சு நடத்தி இருக்கிறார்களே என்று கேட்டதற்கு பதிலளித்த ஜெயக்குமார் அரசியலில் கூட்டணிக்காக கட்சிகளுடன் பேசுவது இயல்புதான். இந்த விஷயத்தில் திமுகவுடன் நடத்திய பேச்சை அந்த கட்சி அரசியல் நாகரீகம் கருதி வெளியிட்டு இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் தேமுதிகவை திமுக அவமானப்படுத்தி இருக்கிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எங்கள் கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது. இதனை கருத்தில் கொண்டு தேமுதிக நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்றார்.

இதனிடையே நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், அதிமுகவில் ஒத்த கருத்துடைய கட்சிகள் சேர்ந்துள்ளது. தேமுதிகவுடன் பிரச்சினை இருந்தாலும் வீட்டில்
சண்டையிடும் பிள்ளையை விரட்டிவிட முடியாது என்ற அடிப்படையில் அந்த கட்சியையும் சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.