ரஜினி புதிய படத்தில் இணைந்துள்ள கீர்த்தி

சினிமா

சென்னை, மார்ச் 7: முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

கடந்த 12 மாதங்களில் காலா, 2.0, பேட்ட என மூன்று படங்கள் மூலம் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்த புதுப் படத்துக்குத் தயாராகி வருகிறார்.ரஜினியின் 166-வது படமாக உருவாக உள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும்தான் இன்னும் வெளியாகவில்லை. மற்றபடி அனைத்து தகவல்களையும் மீடியாக்கள் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகிறது.

இந்தப் புதிய படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேட்ட படத்தில் பட்டையக் கிளப்பிய அனிருத் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

அதே போல் யோகி பாபுவும் இந்த படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக காமெடியனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவரும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க மிகுந்த ஆர்வமாக இருப்பதால் விரைவில் கீர்த்தி சுரேசும் இந்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.0 படத்துக்கு பிறகு லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.