ராஞ்சி, மார்ச் 8: புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடக்கும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங்கின்போது, ராணுவ தொப்பியுடன் களமிறங்குகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே, டி20 தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து, நடந்துவரும் ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், 3-வது ஒருநாள் தொடர் ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து களமிறங்குகின்றனர். இன்றைய போட்டியின் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர். அதேசமயம், சொந்த மண்ணில் தாங்கள் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தீவிரம் காட்டுவர்.

சொந்தவூரில் சோபிப்பாரா தோனி?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்துவரும் இன்றைய போட்டியில், அவர் சோபிப்பார் என்று நம்பப்படுகிறது. தாய் மண்ணில் அவர் ஆடும் கடைசி சர்வதேச போட்டி என்பதால், அவர் அதிரடிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நேற்று தோனியை கவுரவிக்கும் விதமாக, ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் ராஞ்சி மைதானத்தின் தெற்கு ஸ்டாண்டுக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது, கவனிக்கத்தக்கது.