சென்னை, மார்ச் 8:தேமுதிகவுடனான கூட்டணி பற்றி என்னிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீண்காக்காதீர்கள் என்றும், அந்த கட்சிக்காக நாங்கள் பலிகடாவாக விரும்பவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. எந்தெந்த தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வது என்பது குறித்து இன்று முதல் ஆலோசனை நடைபெறும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இன்று மாலை அறிவாலயத்திற்கு வந்து பேச்சு நடத்துவார்கள். அதனைத் தொடர்ந்து கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என அறிவிக்கப்படும்.

திமுகவுக்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம், சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட தமிழர் பேரவை, பொன்.குமார் தலைமையிலான தமிழக விவசாய தொழிலாளர் கட்சி, என்.ஆர்.தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர்கள் மக்கள் கட்சி மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், ஆதிதிராவிடர் தமிழர்பேரவை, எஸ்றா சற்குணம் தலைமையிலான கிறிஸ்தவ அமைப்பு மற்றும் தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 12,500 ஊராட்சிகளிலும் நாங்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை துவக்கி விட்டோம் என்றார்.

தேமுதிகவினர் திமுக மீது குற்றம் சாட்டி வருவது குறித்து கேட்டதற்கு, எங்கள் பொருளாளர் இதற்கு ஏற்கனவே பதிலளித்து விட்டார். அது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

மேலும் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது, தேமுதிக பற்றி கேட்டு என் நேரத்தையும், உங்கள் நேரத்தை யும் வீணாக்க வேண்டாம். அந்தக் கட்சிக்காக நாங்கள் பலிகடாவாக விரும்பவில்லை என்று ஸ்டாலின் மேலும் கூறினார்.

முன்னதாக அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற் றஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.