சென்னை, மார்ச் 9: மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி கடந்த தேர்தலின் போது மார்ச் 5-ந் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது 9 தேதியாகி விட்டது. எனவே எந்த நேரத்திலும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை பெரிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தொகுதி உடன்பாடுகளை முடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு 5, பாமகவுக்கு 7, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் மட்டும் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதிமுகவை பொருத்தவரை 20-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 40 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறுகிறது.

நேர்காணலுக்கு பின்னர் அதிமுகவின் ஆட்சிமன்ற குழு கூடி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்.
அதிமுகவைப் பொருத்தவரை புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மகன்கள், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இடம்பெற்றுள்ள பிஜேபிக்கு அனேகமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர்,  சிவகங்கை, வடசென்னை ஆகிய தொகுதிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதே போன்று மற்ற நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர் பெயர்கள் கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

பிஜேபி ஆட்சிமன்ற குழு வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்.  இதே போல பாமகவும் தனது வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மத்திய சென்னையில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

திமுக தீவிரம்
திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 21
சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறலாம் என்ற யூகத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுடன் திமுக சார்பில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக தொகுதிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து விரைவில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தூத்துக்குடியில் கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
திமுக வேட்பாளர்கள் பட்டியலில் புதுமுகங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு தீவிரமாக உள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வீ. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி
சிதம்பரம் உள்ளிட்டோர் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கட்சி மேலிடத்தில் காயை நகர்த்தி வருகிறார்கள்.
திமுக தரப்பில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இதே போல் துரைமுருகனின் மகன் கதிர் வேலூர் தொகுதியை கேட்டிருப்பதாக தெரிகிறது.
அதே போலவே மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன.