சென்னை, மார்ச் 10:தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த்
கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடத்தப்பட உள்ளதே என கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், குடிநீர் பிரச்சனைக்கு தீர்க்கும் கட்சிக்குத்தான் ஓட்டு என்றும், இப்போதைய தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இது 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேலுக்கும் பொருந்தும்.

குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நான் கூறியது மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுக்கும் பொருந்தும்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

2017ம் டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

234 சட்டமன்ற தொகுதிகளில்தான் போட்டியிடுவோம் என அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்த நிலையில் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.