சென்னை, மார்ச் 11:தங்கும் விடுதியில் செல்போனில் பேசி கொண்டிருந்த சினிமா நடிகர் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி மற்றொரு நடிகர் அவரை தாக்கியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் கடந்த இரு வாரங்களாக அறை எடுத்து தங்கி உள்ளார். மேலும் அவன் அவள் அது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அபிஷேக் தான் வசிக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் அமர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த களவாணி பட நாயகன் விமல் மற்றும் 4 பேர் அபிஷேக்கிடம் இங்கு ரூம் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அப்போது செல்போனில் பேசி கொண்டிருந்ததால் அபிஷேக் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அபிஷேக்கை ஆபாசமாக பேசியதுடன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அபிஷேக்கின் வலது கண், நெற்றி, இடது கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அபிஷேக் சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அபிஷேக் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டிற்கு சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தியதுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.