சென்னை, மார்ச் 11:போலீஸ் போல் நடித்து ஓடும் பஸ்சில் இருந்து நிதி நிறுவன ஊழியரை இறக்கி காரில் கடத்தி சென்று 98 லட்ச ரூபாய் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஏழுகிணறில் உள்ள நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கோபிநாத் (வயது 26). இவர் கடந்த 29-ந் தேதி இரவு 9.00 மணியளவில் பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டிற்கு செல்லும் 15பி பேருந்தில் ரூ.98 லட்சத்துடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை டெய்லர்ஸ் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே பஸ் நின்ற போது காரில் வந்த 2 பேர் தங்களை போலீஸ் என்று கூறி கோபிநாத்தை மிரட்டி வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.காரை டிரைவர் ஒருவர் ஓட்டி உள்ளார். வண்டலூர் அருகே கார் சென்ற போது கோபிநாத்தை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த ரூ.98 லட்சம் ரொக்கப்பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் கோபிநாத்தை கீழே தள்ளிவிட்டு விட்டு காரில் தப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோபிநாத் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் எழும்பூர், மண்ணடி உள்பட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூல் செய்து அந்த பணத்தை திருச்சி லால்குடியில் உள்ள நிதி நிறுவன உரிமையாளருக்கு வாரந்தோறும் கொடுத்தனுப்புவது வழக்கம் என்றும் அவ்வாறு வசூல் செய்த பணத்தை திருச்சிக்கு கொண்டு செல்வதற்காக மாநகர பேருந்தில் கோயம்பேடு சென்ற போது அவரை கடத்தி சென்று பணத்தை பறித்தது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனத்தில் சகாபுதீன் மற்றும் முகமது ஆகியோரும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு முகமதுதான் பணத்தை எடுத்து செல்வார் என்றும், அவ்வாறு பணத்தை எடுத்து செல்ல காத்திருந்த போது வழியில் அந்த பணம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்த டெய்லர்ஸ் ரோடு பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கீழ்ப்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பணம் கொண்டு செல்லப்படுவது கோபிநாத், சகாபுதீன் முகமது ஆகியோருக்கு மட்டும் தெரியும் என்பதால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.