திருச்சி, மார்ச் 12: திருச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள குதுப்பா பள்ளம் பகுதியில் ஏராளமான குடிசைகள் உள்ளன. நேற்று நள்ளிரவு 1.15 மணி அளவில் இங்குள்ள ஒரு குடிசை திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. குடிசைகள் எரிவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் உஷார் அடைந்து அய்யோ, அம்மா என்று அலறினர். வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி வெளியேற வைத்தனர்.
உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி லியோ ஜோசப் தலைமையில் இரண்டு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ பக்கத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினரின் சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தீ எரிந்து கொண்டிருந்த போது 2 கியாஸ் சிலிண்டர்கள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் வெடித்தன. இது அந்த பகுதியில் குண்டு வெடித்ததை போன்று பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. சத்தம்கேட்டு பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றும் அரசு மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
தீப்பிடித்த குடிசைகளில் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு படையினரும் போலீசாரும் சேர்ந்து வெளியே எடுத்து வைத்தனர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் 10 குடிசைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். பொருட்கள் சேத விவரம் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.