சென்னை, மார்ச் 12:  ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதா? என விசாரிப்பது இதுதான் முதல்முறை என்று, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரிக்க தடை கோரியும், ஆணைய விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஆஜராக தடை விதிக்க கோரியும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்ச்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தவறான சிகிச்சை வழங்கியதாக ஆணைய வழக்கறிஞர் எப்படி கூற முடியும்? ஆணையம் அமைதி காத்தது ஏன்? ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ரகசியமாக மருத்துவ குழுவை நியமித்தது ஏன்?

சுதந்திர இந்தியாவில், அரசியல் தலைவர் ஒருவருக்கு வழங்கிய சிகிச்சை சரியானதுதானா? போதுமானதுதானா? என விசாரணை நடத்த ஆணையம் அமைத்தது இதுதான் முதல்முறை என்று வாதிட்டார்.

இதையடுத்து. இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.