சென்னை, மார்ச் 12: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். காலையில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், மாலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை காலை 8.30 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்படுகிறார். அந்த விமானம் காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறது.

சென்னை விமான நிலயத்திலிருந்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் நடைபெறும் விழாவில் ராகுல் பங்கேற்கிறார். கல்லூரி மாணவிகளுடன் அவர் கலந்துரையாடுவார். அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார் என்று தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகை யாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டியளிக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் அல்லது ஓட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

பின்னர் கிண்டியில் ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அங்கிருந்து 2.20 மணிக்கு சென்னையில் விமானம் நிலையம் வருகிறார். பின்னர் தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார். செல்லும் வழியில் கன்னியாகுமரி நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரச்சாரத்தை துவக்கி வைப்பார் என்று தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி முதல்முறையாக தமிழகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.