புதுடெல்லி, மார்ச் 12: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், கூட்டணியை இறுதி செய்வதிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல அவரது தாயாரும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவருமான சோனியா காந்தி மீண்டும் ரேபரேலி தொகுதியில் களமிறங்குகிறார்.

இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்றித் தொகுதியான வாரணாசியிலேயே மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தனக்கு எதிராகப் போட்டியிட்ட ‘ஆம் ஆத்மி’ தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.