சென்னை, மார்ச் 12: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ள நிலையில், முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அடையாளம் காணுவதிலும், வேட்பாளர் தேர்விலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுவையில் காலியாக உள்ள ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீது 27-ந் தேதி பரிசீலனை நடைபெறும். 29-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மே 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழகம், புதுவையில் பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுக அணியில் தமாகா மட்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டி உள்ளது. அது முடிவானதும், எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும்.

இதற்கிடையே மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 2-வது நாளாக நேர்காணல் நடக்கிறது.
திமுக அணியில் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலையோ அல்லது இரவிலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமமுக சார்பிலும்வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியது போக எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.

அதேபோல நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.