சென்னை, மார்ச் 13:காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மேலும் ரபேல் விமான ஊழல் விவ காரத்திலும் பண மதிப்பிழப்பு நட வடிக்கைகளிலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விககுக்கு பதிலளித்தார்.

ஜூன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்து வந்த அவர் மேடையில் நின்று மைக்கைப் பிடித்து பேசினார். மாணவிகள் ஒவ்வொருவராக அவரிடம் கேள்விகள் கேட்டனர்.அப்போது ராகுல் காந்தி கூறுகையில், இந்தியாவில் தற்போது கொள்கை களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கிறோம். சிலர் குறிப்பிட்ட தரப்பினரை தாழ்வான நினைக்கின்றனர். அதனால் தான் பிரச்சினை ஏற்படுகிறது என்றார்.

பின்னர் மாணவிகள் ஒவ்வொருவராக கேள்விகள் கேட்க அனுமதிக்கப் பட்டனர். இந்தியாவில் டாடா ஆராய்ச்சி நிலையம் நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாக செய்தி வந்துள்ளது. கல்வி ஆராய்ச்சிக்காக நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு மாணவி கேட்டதற்கு, கல்விக்கு நிதி பற்றாக்குறையாக இருக்கக்கூடாது. பட்ஜெட்டில் 6 சதவீதம் நிதியை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடிப்படை கல்வியில் அதிக கவனம் செலுத்துவோம். கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. அரசின் பங்களிப்பின் மூலம் தான் தீர்வு காண முடியும். இப்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என ஒரு மாணவி கேட்டதற்கு பதிலளித்த அவர் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமா? என்று அந்த மாணவியிடம் திருப்பி கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்ததும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிகவும் சிக்கலாகி விட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து விடுபட ஜிஎஸ்டி வரியை ஒரே மாதிரியாக எளிமையாக்குவோம் என்றார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த போது ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் என்பதே என் கருத்து. எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும். உத்தரபிரதேசம், பீகாரை விட தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தலைமை பதவிக்கு பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.