சென்னை, மார்ச் 14: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பிஜேபி கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்த கட்சிகள் அனைத்தும் சேர்ந்துள்ளன.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர். மேலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் உடனிருந்தனர்.

ராமதாஸை எல்.கே.சுதீஷ் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா விஜயகாந்த்தும் உடனிருந்தார்.

தேர்தலில் இணைந்து வாக்கு சேகரிக்கவும், கூட்டணி வெற்றிக்காக உழைக்கவும் தலைவர்கள் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், விஜயகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரிக்கவே தாம் வந்ததாக கூறினார்.