சென்னை, மார்ச் 14: மருத்துவக்கல்லூரியில் இடம் மற்றும் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.50 கோடி மோசடி தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 49). தொழிலதிபரான இவர் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் வாங்கி தரக்கோரி போக்குவரத்து துறையில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜை அணுகினார். இதற்கு இடம் வாங்கி தருவதாக உறுதியளித்து ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொண்டதாக கூறப் படுகிறது.

2013-ல் இவ்வாறு பணம் பெற்றதாக வும், பேசிய படி சீட் வாங்கி தரவில்லை என்பதால் பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிசார் அகமது புகார் செய்தார். இதன் அடிப்படையில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

இதனிடையே திருவண்ணாமலை யைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட 107 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக நாகப்பன் என்பவரிடம் சுமார் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாக இன்னொரு புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் வசூல் செய்யப்பட்ட 5 கோடியையும் நாகப்பன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜிடம் கொடுத்ததாக கூறினார்.

இதன் அடிப்படையில் மோகன் ராஜியிடம் போலீசார் மேலும்  விசாரணை நடத்தி இந்த வழக்கிலும் அவரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நாகப்பன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இப்போது கைதான மோகன்ராஜூக்கு 62 வயது ஆகிறது. அண்ணாநகரில் இவர் வசித்து வருகிறார்.