‘ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற தகுதியானதுதான்’ – விராட் கோலி

விளையாட்டு

டெல்லி, மார்ச் 14:  அழுத்தமான சூழ்நிலைகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, தொடரை கைப்பற்றுவதற்கு தகுதியான அணி என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, புதுடெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதன்மூலம், கடந்த ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு, ஆஸ்திரேலியா அணி தற்போது பழித்தீர்த்துள்ளது.
இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், 273 ரன்கள் என்பது வெற்றி பெறக்கூடிய ஸ்கோர்தான்.

நாங்கள் 15 முதல் 20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்து விட்டோம்.
ஆனால், தொடர் முழுவதும், ஆஸ்திரேலியா அணி எங்களை விட மிகச்சிறப்பாகவே விளையாடினர்.

மிகவும் அழுத்தம் நிறைந்த நெருக்கடியான நேரங்களில் தைரியமாக விளையாடி வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்தான். கடைசி 3 போட்டிகளில் சில வீரர்களைக் களமிறக்கி பரிசோதனை செய்து பார்த்தோம். உலகக்கோப்பையில் பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறோம் என்றார்.