மதுரை, மார்ச் 14: தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு அதிக அளவில் பொதுமக்களை வாகனங்களில் அழைத்துவர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

மேலும் பிளக்ஸ் போர்டுகள், விளம்பர பேனர்கள் வைக்கவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கு, அதிக அளவில் கூட்டத்தை சேர்க்க பொதுமக்களை வாகனங்களில் அழைத்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் பண வினியோகம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும், சாலைகளில் விளம்பர பேனர்கள் மற்றும் தலைவர்களை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவில் கூறப்பட்டிருந்த அம்சங்கள் குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களில் மக்களை திரட்டி அழைத்து வருவதற்கு தடை விதித்துள்ளனர்.
மேலும் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கவும் இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில்,

குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சியிடம் தேர்தல் செலவுத் தொகையை வசூலிப்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வழக்கை ஒரு வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.