மருத்துவமனையில் சாய்னா: சுவிஸ் ஓபனில் விலக முடிவு

விளையாட்டு

அரியானா, மார்ச் 14: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதன்காரணமாக, சுவிஸ் ஓபன் தொடரில் இருந்து விலக அவர் முடிவுசெய்துள்ளாராம்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், சமீபத்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், சாய்னா நேவால் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, அவர் சுவிஸ் ஓபன் தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சாய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தமான செய்தி என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த திங்கள் கிழமையில் இருந்து கடுமையான வயிற்றுவலியை அனுபவித்து வருகிறேன். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலும் ஏற்பட்ட தாங்கமுடியாத வயிற்றுவலியையும் சமாளித்துதான் விளையாடினேன். இதன்காரணமாக, சுவிஸ் ஓபன் தொடரில் இருந்து விலக முடிவுசெய்துள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன். இவ்வாறு தனது டிவிட்டர் பதிவில் சாய்னா தெரிவித்துள்ளார்.