சென்னை, மார்ச் 14: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பணியில், சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் ஒன் பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலையில் நடைபெறுவதற்கு பதிலாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மொழித்தாள் முதல் தேர்வு இன்று தொடங்கியது.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிக்குள் திருத்தி முடிக்குமாறு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.