காஞ்சிபுரம், மார்ச் 14: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சிலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.

பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றதைத் தொடர்ந்து, பங்குனி உத்திர விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோயில் தொண்டு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்குனி உத்திர விழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், பழைய உற்சவர் சிலையைச் சீரமைத்து பங்குனி உத்திர விழாவை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை அடுத்து பழைய உற்சவர் சிலையைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குவதில் இந்து சமய அறநிலையத்துறை தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், அதிகாரிகள் முன்னிலையில் ஏகாம்பரநாதரின் பழைய சிலையைச் சீரமைத்து, சிவாச்சாரியார்கள் பாலாலயம் செய்யும் பணிகள் தொடங்கின.

தொடர்ந்து, பங்குனி உத்திர விழாவில் ராஜவீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெறும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய உற்சவர் சிலை சீரமைப்புப் பணிகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.