சென்னை, மார்ச் 14:  உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

பணப்பரிவர்த்தனை தொடர்பாக பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வாகனங்களை தணிக்கை செய்ததில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொது கட்டிடங்களில் அரசியல் கட்சிகள் செய்திருந்த சுவர் விளம்பரங்கள் 64,385 இடங்களில் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் கட்டிடங்களில் செய்யப்பட்டு இருந்த 24,082 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 875 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பணப்பரிவர்த்தனையை கண்காணிக்க வருமான வரித்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், தங்கும் நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பணப்பரிவர்த்தனையை கண்காணிக்குமாறு வரிமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரித்துறையிடம் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669-யை பயன்படுத்தலாம். 044 2826 2357 என்ற தொலை நகலி எண்ணையும், 94454 67707 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பொதுமக்கள் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.

மேலும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

பணம் எடுத்துச்செல்லும் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ரூ.10 லட்சம் வரை உரிய ஆவணங்கள் உடன் கொண்டு சென்றால் அது பறிமுதல் செய்யப்படமாட்டாது. அதற்கு மேல் ஆவணங்களுடன் பணம் எடுத்துச்சென்றாலும் வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். உரிய
விசாரணைக்குப்பிறகு நியாயமான வழியில் அந்த பணம் கொண்டு செல்லப்படுமானால் அது திருப்பி அளிக்கப்படும்.

செலவின பார்வையாளர்கள் விரைவில் வரவுள்ளனர். அவர்கள் வந்ததும் தேவைப்படுமானால் மேலும் பார்வையாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்.

பதற்றமான இடங்களில் கூடுதல் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். மதுரையில் தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து கூறப்படும் மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணையம்தான் இது குறித்து முடிவெடுக்கும். பொள்ளாச்சி ஜெயராமன் தன் குடும்பம் குறித்து சமூக ஊடகங்களில் ö வளியாகும் அவதூறு பிரச்சாரங்களை தடுத்து நிறுத்த கோரி அளிக்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் போது தேர்தல் நடத்தப்படுவதால் அதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த தேர்தல் நாடுமுழுவதும் நடைபெறுவதால் இதை தள்ளி வைப்பது கடினம். இருப்பினும் புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இது பற்றி உரிய முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.