ஊட்டி, மார்ச் 15: திமுகவில் நீலகிரி தனி தொகுதியில் ஆ.ராசாவை வேட்பாளராக நிறுத்துவதற்கு மாவட்ட திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் நீலகிரியும் ஒன்று என்பது உறுதியாக தெரிகிறது. இந்தத் தொகுதியில் 2ஜி ஊழல் வழக்கிலிருந்து விடுதலை ஆனவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

2009 மக்களவைத் தேர்தலில் இருந்து இந்தத் தொகுதியில் ஆ.ராசா போட்டியிட்டு வருகிறார். ஆனால் இந்த முறை மாவட்ட திமுகவில் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
திமுகவைச் சேர்ந்த படுகர் இனத் தலைவர் கே.ராமச்சந்திரன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத் தலைவராக இருந்தவர். 2014-15-ல் அவர் மாற்றப்பட்டார். 2016-ல் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது எதிர்ப்பாளரும் கட்சியின் தற்போதைய செயலாளருமான முபாரக் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.

உட்கட்சிப் பூசல் காரணமாகவே 2016 சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியில் திமுக தோல்வியடைந்தது. அப்போது கோத்தகிரிக்கு ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவர் முன்னிலையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ.ராசா வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர் என்பதாலும் இம்முறை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உள்ளூர் திமுகவினர் கருதுவதாக தெரிகிறது.