விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார், பேசமாட்டார்: எல்.கே.சுதீஷ் பேட்டி

அரசியல் தமிழ்நாடு

சென்னை, மார்ச் 15: மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார் என்று அவரது மைத்துனரும் தேமுதிக துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் கூறினார்.

இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது வருமாறு:-

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது. தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்வார். ஆனால் அவரால் பேச இயலாது. அவர் ஒருமுறை சுற்றி வந்தாலே போதும். வாக்காளர்களும் அவரது ரசிகர்களும் திருப்தி அடைந்து விடுவார்கள் என்றார்.

தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே? இதில் நீங்கள் திருப்தி அடைந்து இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று பதிலளித்தார்.

கள்ளக்குறிச்சியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு அதை எங்கள் தலைவர் முடிவு செய்வார் என்றார். நான் எனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருக்கிறேன் என்றார்.
திமுக, அதிமுகவுடன் ஒரே சமயத்தில் பேச்சு நடத்தினீர்களே ஏன் என்று கேட்டதற்கு திமுக தான் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அது செயல்படவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக கேப்டன், எனது சகோதரி மற்றும் நான் ஆகியோர் பிரச்சாரம் செய்தோம். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார் என்றார்.

நீங்கள் கூட்டணி பற்றி திமுகவுடன் பேசியதாக துரைமுருகன் கூறினாரே என்று கேட்டதற்கு, அது மோசமான அரசியல் விளையாட்டு. அப்படி சொல்வது தவறானது. துரைமுருகனை நான் அண்ணன் என்று அழைப்பேன். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. நடந்தது எல்லாமே ஒரு அரசியல் என்று பதிலளித்தார்.