சோளிங்கர் தொகுதி ஒதுக்க மறுப்பு: திமுக மீது காங் அதிருப்தி

அரசியல் தமிழ்நாடு

சென்னை, மார்ச் 15: 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என்பதில் அந்தக் கட்சி பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்த போது சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இப்போது தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் பங்கு கேட்பதாக தெரிகிறது. குறிப்பாக 2016 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கரில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்தத் தொகுதி தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இடைத்தேர்தல்களில் மறைந்த கருணாநிதி பின்பற்றிய அதே அணுகுமுறையை பின்பற்றி போட்டியிட்ட அதே கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் தரப்பில் வற்புறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவேலிடம் (இப்போதைய தினகரன் ஆதரவாளர்) தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியை அவர் தனக்கு மீண்டும் ஒதுக்குமாறு கேட்டதாகவும் இதற்கு திமுக தலைமை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

இதனால் அதிருப்தி அடைந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.