சென்னை, மார்ச் 15:மக்களவை தேர்தல் அறிக்கையை யொட்டி பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மத்தியில் பாமக இடம்பெறும் ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.2000-ம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000-ம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இடம்பெற் றுள்ள பாமக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் பத்திரிகையாளர் ஒருவர் பெற்றுக் கொண்டார். 94 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், பாமகவின் மாம்பழம் சின்னம், தேமுதிகவின் முரசு சின்னம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.தன்னாட்சி அதிகாரம் படைத்த புதிய தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில் வலிமையான இந்தியா, தன்னிறைவு தமிழகம், ஒளிமயமாக எதிர்காலம் என்ற தலைப்புகளில் பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் செய்த சாதனைகள் ஒரு பக்கத்தில் இடம் பெற்று இருந்தது. கடந்த 30 ஆண்டு காலத்தில் பாமக எதிர்க்கட்சியாக இருந்து சாதித்தவைகள் பட்டியலிடப் பட்டு இருந்தன. தேர்தல் வாக்குறுதி களாக காவிரி டெல்டா பிரதேசத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கவும், வேளாண் விளைபொருட்கள் மண்டலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், இதை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள் ளப்பட்டிருந்தது. வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000-மும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000-மும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்டுதல், இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்குதல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துதல் போன்றவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.