சென்னை, மார்ச் 15:சிலை மோசடி வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி இன்று கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் பட்டார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் தங்க உற்சவர் சிலை செய்தது மற்றும் ஓதுவார் குழலி உற்சவர் சிலை செய்தது ஆகியவற்றில் மோசடி நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த இரு
சிலைகளையும் 114 கிலோ தங்கத்தில் செய்ததாகவும், இதில் பெருமளவில் மோசடி நடந்திருப்ப தாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

சிலை கடத்தல் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையி லான குழுவினர் இந்த சிலைகளை ஆய்வு செய்தபோது இவற்றில் பெரும் மோசடி நடந்தது தெரியவந்தது.பக்தர்களிடம் 15 கிலோ தங்கம் வசூல் செய்ததாகவும், 8 கிலோ தங்கத்தை சிலைகளில் சேர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை ஆய்வு செய்ததில் இதுவும் பொய் என தெரியவந்தது. இந்த சிலைகளை செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீரசண்முகமணி உத்தரவிட்டு இருந்தார். இது தொடர்பாக இவரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்று இருந்த இவரை இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்றிச்சென்றனர். இதே வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா, இணை கமிஷனர் கவிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளனர்.