புதுடெல்லி, மார்ச் 15:ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் இன்றும் மறுத்துவிட்டது. இது குறித்து டி.டி.வி. தினகரன் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்து அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் 2017-ல் ஒதுக்கியது. இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்தில் செய்த மேல் முறையீடு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கை பிப்ரவரி 28-ந் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் வரும் 25-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.