– நேர்காணல்: எம்.சுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 16: அதிமுகவுடன் தேமுதிக இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளது. இது வெற்றிக் கூட்டணி என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மாலைச்சுடருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்துக்கு கேப்டன் விஜயகாந்த் வருவார், மக்களிடம் பேசுவார் என்றும் அவர் கூறினார். பாமகவுக்கும் எங்கள் கட்சிக்கும் இடையே இணக்கமான சூழ்நிலையே உள்ளது என்றும் அவர் கூறினார்.

தேமுதிகவின் துணை  பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மாலைச்சுடருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தற்போது தேமுதிக இரண்டாவது முறையாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை போலவே இந்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடும்.

அதிமுக, பிஜேபி, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாங்கள் முதலில் பிஜேபியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பிஜேபி கூறியது. அதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தோம்.  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் மருத்துவர்கள் தடுத்தும் தொண்டர்களை பார்ப்பதற்காக சென்னைக்கு திரும்பினார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தொண்டர்களை சந்திப்பார். அவர்கள் மத்தியில் பேசுவார்.

எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை முதல்வர், துணை முதல்வர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எங்கள் கட்சி பொருளாளர் பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்வார்கள்.
பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். இது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமகவுக்கும் எங்களுக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. இணக்கமான சூழ்நிலையே உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் திமுக எங்களை கூட்டணிக்கு அணுகுவது வாடிக்கை. அதே போல இந்த தேர்தலிலும் எங்களை அணுகினார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். ஆனால் துரைமுருகன் நடந்து கொண்ட விதம் அரசியல் நாகரீகமற்றது.

எங்கள் கூட்டணியில் இருந்த வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். ஸ்டாலினை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தவர் வைகோ. பல தொண்டர்கள் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்கள். இப்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று வைகோ கூறுகிறார். மக்கள் இதற்கு தக்க பதில் அளிப்பார்கள் என்று அவர் கூறினார்.

விருப்ப மனு
நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று கேட்ட போது, கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறேன். கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றும் சுதீஷ் தெரிவித்தார்.