சென்னை, மார்ச் 16: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதற்காக, சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

12-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவக்க விழாவுடன் நடைபெற உள்ள முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுண்டர் மூலமாகவும் இன்று காலை 11.30-க்கு தொடங்கியது.

வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நேரத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் இந்த 12-வது ஐபிஎல் தொடருக்கான முதல் அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.  அதில் வரும் 23-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை 17 போட்டிகள் நடைபெறுகிறது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிக்கெட்களை பெறுவதற்காக, போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர்களில் நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர். நீண்ட நெடும் வரிசையில் விடிய விடிய காத்திருந்த அவர்கள் காலை 11.30 மணி அளவில் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர்.

இந்த போட்டிக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகள் முடியும் வரை ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக ரூ.1,300 முதல் அதிகபட்சமாக ரூ. 6,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கையில் கேட்ச்:ஒரு லட்சம் பரிசு
இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தினை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் கேட்ச் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம், டிக்கெட் விற்பனை மேலும் சூடுப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.