சென்னை, மார்ச் 16: மக்களவை தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக துணை ராணுவத்தினர் சென்னை வந்தனர். இங்கிருந்து  திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி, புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதி ஆகியவற்றுக்கு ஏப்ரல் 18-ந் தேதி ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்து விட்டன. தொகுதிகள் பங்கீடு முடிவடைந்து தற்போது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்னும் 3 நாளில் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள். 27-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வாபஸ் பெறுவதற்கு 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 2 கம்பெனி படை வீரர்கள் சென்ட்ரல் வந்து சேர்ந்தனர்.

இன்று மதியம் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 4 கம்பெனி படை வீரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள். அவர்களில் ஒரு கம்பெனி வீரர்கள் மதியம் 1.30 மணிக்கு திருப்பூர் செல்கிறார்கள். மேலும் இன்னொரு கம்பெனி வீரர்கள் இன்றே சேலம் செல்கிறார்கள். இது தவிர கோரக்பூரில் இருந்து திருச்சி, கோவை மற்றும் மானாமதுரை ஆகிய இடங்களுக்கும் துணை ராணுவப்படையினர் இன்று அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் களுக்கு உதவியாக துணை ராணுவத் தினரும் இருப்பார்கள் என்றும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.