சென்னை, மார்ச் 18:தமிழக முதல்வர் பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பள்ளிக் கரணையை அடுத்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத் தூரைச் சேர்ந்த சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. போனில் பேசிய மர்ம நபர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள தாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மோப்ப நாய்களுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், முதல்வரின் வீட்டிற்கு சென்றனர். அவரது வீடு மற்றும் அருகில் உள்ள கட்டிடங்கள், என முதல்வரின் வீட்டை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த போன்கால் பள்ளிக்கரணை பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பள்ளிக்கரணை போலீசாருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த விலாசத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த சுந்தர்ராஜ் (வயது 23) என்பவரை மடக்கிப்பிடித்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர்ராஜ் கோவிலம்பாக்கம் சுண் ணாம்பு கொளத்தூரைச் சேர்ந்தவர் ஆவார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.