சென்னை,மார்ச்.18:ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நாளை தொடங்கவுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், கலெக்டர்களுடன் இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்தவுள்ளார்.

17-வது மக்களவைக்கான தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவிக்கப்பட்டன.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் 24 மக்களவை 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகியவையும் வேட்பாளர்களை வெளியிட்டுள்ளன. பிஜேபி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. அந்த கட்சி ஓரிரு நாளில் வேட்பாளர்களை அறிவிக்குமென தெரிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரிரு தினங்களில் தேர்தல் பிரசாரத்தில் தலைவர் ஈடுபடவுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை 2-ம் கட்டத்தில் மக்களவை மற்றும் 19 சட்டசபை இடைத்தேர்தலுக்கு ஏப்ரல்18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் வரும் 27-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29-ம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுதாக்கலின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்களில் மட்டும் கட்சியினர் அழைத்து வர அனுமதி, வேட்புமனுதாக்கலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனுதாக்கலுக்கான தொகுதிவாரியாக அலுவலகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி வேட்பாளர்கள் வேறு வேறு நேரத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் எனவும் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பதற்றமான தொகுதிகள் எவை, பதற்றமான வாக்குசாவடி மையங்கள் எவை, வேட்புமனுதாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை. தேர்தல் முன்னோர்பாடுகள், வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.