சென்னை, மார்ச் 18:மதுரையில் அடுத்த மாதம் 18-ந் தேதி வரும் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:மதுரையில் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெறும். மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். மதுரையில் சித்திரை விழா நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படும்.தேமுதிகவின் முரசு சின்னம் போல உள்ள கூடை சின்னத்தை அகற்ற வேண்டுமென்ற அக்கட்சியின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.77 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில் கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக இதுவரை அதில் தகவல் வரவில்லை.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் மற்றும் சரிபார்க்கும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும். 5 ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழை விண்ணப்பத்தோடு கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்கு தொடர்பாகவும் நிலுவையில் உள்ள வழக்கு, தண்டனை ஆகியவை பற்றியும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.